மதுராந்தகம் இடைத்தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்ட திடல் – அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு நேரில் ஆய்வு!

மதுராந்தகம்:
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை ஆதரித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அக்டோபர் 3-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள திடலை முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக சார்பில் இ.பரந்தாமன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு தீவிர வாக்குச் சேகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்க உள்ளார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் அமையவுள்ள பிரதான மைதானத்தை இடைத்தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு மற்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மாவட்ட கழகச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ.வுடன் இணைந்து நேற்று நேரில் சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, பொதுக்கூட்ட மேடை அமைப்பு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடனும் நிர்வாகிகளுடனும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கழகத் தலைவரின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பான முறையில் நடத்திட தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


