உழவர்கரையில் ரேஷன் அட்டை e-KYC சிறப்பு முகாம்: சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரி, செப். 30:
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு ‘சேது சேவா’ முகாம் உழவர்கரை தொகுதியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்தல், குடும்ப அட்டையுடன் ஆதார் மற்றும் கைபேசி எண்ணை இணைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் ரெட்டியார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வ. சுப்பையா அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை முழு நேரமும் செயல்படும். முகாமிற்கு வரும் பொதுமக்கள் தங்களது அசல் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) பெறக்கூடிய பதிவு செய்யப்பட்ட கைபேசியை தவறாமல் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுவரை e-KYC செய்யாதவர்கள், கைபேசி எண் இணைக்காதவர்கள் மற்றும் குடும்ப அட்டை தொடர்பான இதர சேவைகள் தேவைப்படும் உழவர்கரை தொகுதி பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.


