புதுச்சேரியில் மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி திருத்தம்: பள்ளி மண்டலங்களில் வேகக் கட்டுப்பாடு, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு புதிய விதிகள்!
புதுச்சேரி, செப். 30:
புதுச்சேரி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதசாரிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதை உறுதி செய்யவும் மோட்டார் வாகன சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நகரப் பகுதிகளில் பாதசாரிகள் எளிதாக நடந்து செல்லும் வகையில், நடைபாதைகள் சொரசொரப்பான தரைத்தளத்துடனும், சக்கர நாற்காலிகள் எளிதில் சென்று வரக்கூடிய தடையற்ற அமைப்பாகவும் வடிவமைக்கப்பட வேண்டும். சாலை பராமரிப்பு அல்லது கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது, பாதசாரிகள் பாதுகாப்பாகச் செல்ல குறைந்தபட்சம் 1.5 மீட்டர் அகலம் கொண்ட மாற்றுப் பாதையை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் பாதசாரிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் 150 மீட்டருக்கு ஒருமுறை பாதசாரி கடக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் கைப்பிடிச் சுவர்கள் மற்றும் சாய்வுப் பாதைகளில் பிரெயில் அடையாளக் குறிகள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, பள்ளி மண்டலங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சாலைகளில் வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 25 கி.மீ., ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளை ஒட்டிய பள்ளிகளில் உரிய பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுடன் அதிகபட்சமாக 40 கி.மீ., வரை வேகம் அனுமதிக்கப்படும். பள்ளி மண்டலம் தொடங்குவதற்கு 500 மீட்டருக்கு முன்பாகவே எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்பதும், பள்ளிப் பகுதிகளில் நடைபாதையின் அகலம் குறைந்தபட்சம் 2.5 மீட்டராக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தான சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கியச் சாலைகளில் தனி சைக்கிள் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. புதிய சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும் போதே முன் மற்றும் பின் பிரதிபலிப்பான்கள், சக்கரப் பிரதிபலிப்பான்கள், மணி மற்றும் தலைக்கவசம் ஆகியவை வழங்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் இயக்கப்படும் சைக்கிள்களில் முன் வெள்ளை விளக்கும், பின் சிவப்பு விளக்கும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மோட்டார் வாகன ஓட்டுநர்கள் சைக்கிள்களை முந்திச் செல்லும்போது குறைந்தபட்சம் 1.5 மீட்டர் பக்கவாட்டு இடைவெளி விட்டுச் செல்ல வேண்டும் என்றும், நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகளில் மோட்டார் வாகனங்களை இயக்குவதோ அல்லது நிறுத்துவதோ முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை உள்கட்டமைப்புக் குறைபாடு காரணமாக விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அரசு முகமை அல்லது ஒப்பந்ததாரருக்கு ரூ. 1,00,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகை மாநில சாலை பாதுகாப்பு நிதியத்தில் சேர்க்கப்படும். மேலும் ஒப்பந்தமும் ரத்து செய்யப்படலாம். விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு முதல் முறை ரூ.1,000 அபராதமும், மறுமுறை விதிமீறினால் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும். நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வோருக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும். நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் பராமரிப்பின்மை குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.


