தட்டாஞ்சாவடி தொகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.எஸ்.பி கலைவாணன் ஐ.பி.எஸ். கள ஆய்வு: பாதுகாப்புப் பணிகள் தீவிரம்!

புதுச்சேரி:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை அமைதியான சூழலில் ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP) ஆர். கலைவாணன் ஐ.பி.எஸ்., தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு முக்கிய வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் உயர் அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படை அதிகாரிகள் உடனிருந்தனர்.
வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்புகள், 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் (CCTV), வாக்காளர்கள் நெரிசலின்றி வந்து செல்வதற்கான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மற்றும் வரிசை மேலாண்மை ஒழுங்குமுறைகள் குறித்து எஸ்.எஸ்.பி கலைவாணன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், பதற்றமான மற்றும் முக்கிய வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.
வாக்குப்பதிவு முழுமையாக அமைதியான முறையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏதுமின்றியும் நடைபெறுவதை களப்பணியில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாவண்ணம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அங்கு பணியில் இருந்த போலீசாருக்கு எஸ்.எஸ்.பி. ஆர். கலைவாணன் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
புதுச்சேரி காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் இணைந்து தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் தொடர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணிக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
