புதுச்சேரியில் நடப்பாண்டில் 637 பேருக்கு டெங்கு பாதிப்பு: தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது சுகாதாரத்துறை!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடப்பாண்டில் இதுவரை 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கவுள்ள சூழலில், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் தடுப்புக்கான சிறப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் இயக்கும் நிகழ்ச்சி சுகாதார இயக்குநரக வளாகத்தில் நடைபெற்றது. இதனை சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செவ்வேள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சமுதாய நலவழி மையங்கள் மற்றும் அனைத்துக் கிராமப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி, பொதுமக்களிடம் நோய் தடுப்பு குறித்த தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் பண்பலை வானொலி (FM), திரையரங்குகள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாகவும் விரிவான விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் செய்தி, கல்வி மற்றும் தொடர்பு பிரிவு துணை இயக்குநர் ரகுநாதன், பொது சுகாதாரப் பிரிவு துணை இயக்குநர் உமாசங்கர், தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு பிரிவு உதவி இயக்குநர் முருகன் மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு தொழில்நுட்ப அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றி தேவையற்று கிடக்கும் பழைய டயர்கள், உடைந்த பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் சிமெண்ட் தொட்டிகளில் தேங்கும் சுத்தமான நீரில் தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “புதுச்சேரி முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையின் தொடர் கண்காணிப்பு மற்றும் விரைவான சிகிச்சை முறைகள் காரணமாக இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் நிகழவில்லை. கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து, டெங்கு இல்லாத புதுச்சேரியை உருவாக்க பொதுமக்கள் அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
