புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தட்டாஞ்சாவடி பிரச்சாரத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி தகவல்!
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து, அத்தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி மற்றும் மாநில அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து மிகவும் இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்திலும் இதற்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியில் குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனவும், புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி, ஆளும் அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள தொகுதி மக்கள் திமுகவிற்கு பெருவாரியான வாக்குகள் அளித்து சேதுசெல்வத்தை வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநில அமைப்பாளர் இரா. சிவா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.



