பாசித்திரளால் பச்சை நிறமாக மாறிய புதுச்சேரி கடல்: சுற்றுலா பயணிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கை
புதுச்சேரி, அக்.03: புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடல் நீர் திடீரென அடர் பச்சை நிறமாக மாறி காட்சியளிப்பது அப்பகுதி மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நேற்றும் இன்றும் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாகப் பச்சையாகக் காட்சியளித்ததால், கடலில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளை மீனவர்கள் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இது ‘பாசித்திரள்’ (Algal Bloom) எனப்படும் இயற்கை நிகழ்வு என்றும், தங்களின் வழக்கமான மொழியில் இதனை ‘பூங்கோரை’ என்று அழைப்பதாகவும் தெரிவித்தனர்.
தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காற்றின் வேகம் குறைந்து வெப்ப மாறுபாடு ஏற்படும்போது ‘நாக்டிலுக்கா சின்டிலன்ஸ்’ (Noctiluca scintillans) என்ற நுண்ணுயிர் பாசிகள் அதிகளவில் பெருகுகின்றன. மழைக்காலத்தில் கடலில் கலக்கும் மழைநீரின் ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு வேகமாக வளரும் இந்த பாசிகள், அரபிக்கடலில் இருந்து உருவாகும் நீரோட்டம் வழியாக மன்னார் வளைகுடா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிக்கு அடித்து வரப்படுகின்றன.
இப்பாசிகள் படரும்போது கடல்நீர் பகலில் பச்சை நிறமாகவும், இரவில் நீல நிறத்தில் ஒளிரும் (Bioluminescence) தன்மையுடனும் இருக்கும். இப்பாசிகள் அடர்ந்துள்ள பகுதிகளில் ஆக்சிஜன் அளவு குறைந்து, அம்மோனியா போன்ற நச்சு வெளியேறும் என்பதால் மீன்கள் சுவாசிக்க முடியாமல் இறந்து கரை ஒதுங்கும் அபாயம் உள்ளது. மேலும், இந்த நீரில் இறங்கிக் குளித்தால் தோல் அரிப்பு மற்றும் நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் அலை, நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது பாசிகள் கலைந்து கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கடல்வாழ் உயிரியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

