புதுச்சேரியில் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் சமத்துவ சீமந்த விழா: எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் வாழ்த்து!
புதுச்சேரி, அக். 05:
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் சமத்துவ சீமந்தம் மற்றும் ஊட்டச்சத்து விழா சிறப்பாக நடைபெற்றது.
முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் துறை அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


