காரைக்கால்

கோட்டுச்சேரியில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் நேரில் தொடங்கி வைப்பு!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு மருந்து புகை அடிக்கும் தீவிரப் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.விக்னேஸ்வரன் நேரில் பார்வையிட்டுத் தொடங்கி வைத்தார்.

காரைக்கால் பிராந்தியத்தில் பருவமழை மாற்றங்கள் மற்றும் கொசு உற்பத்தியைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோட்டுச்சேரி அண்ணா நகர் மற்றும் முக்கழுத்து வீதி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இந்த விழிப்புணர்வு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொசு மருந்து புகை அடிக்கும் இயந்திரங்கள் மூலம் தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தீவிரமாகப் புகை அடிக்கப்பட்டு கொசுக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் மருத்துவர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் (MBBS., MLA) கலந்துகொண்டு, கொசு மருந்து அடிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய அவர், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேவையற்ற டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இப்பணியின் போது கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்து சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைத்தனர். ஏற்கனவே புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் ‘சுவச்சதா ஹி சேவா’ உள்ளிட்ட தூய்மை இயக்கங்கள் மூலமாகத் தீவிரத் தூய்மைப்பணிகள் மற்றும் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காரைக்கால் கிராமப்புறப் பகுதிகளிலும் டெங்கு தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன