புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் புதிய ஐடி மண்டலங்கள்: மத்திய அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் பி.ராஜவேலு தகவல்!

புதுச்சேரி: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் நடைபெற்ற மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாட்டில், புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.ராஜவேலு கலந்துகொண்டு உரையாற்றினார். புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியின் வழிகாட்டுதலில் யூனியன் பிரதேசம் அடைந்து வரும் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து அவர் விரிவாகப் பேசினார். புதுச்சேரியில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் ஃபைபர் இணைய வசதி முழுமையாக சென்றடைந்துள்ளதற்கு மத்திய அமைச்சர் சிந்தியா தனது உரையில் பாராட்டு தெரிவித்தார்.

மாநாட்டில் அமைச்சர் ராஜவேலு பேசுகையில், “புதுச்சேரி நான்கு பிராந்தியங்கள் மற்றும் வளமான கலாச்சாரத்தைக் கொண்ட தனித்துவமான பகுதியாகும். உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் 72.3 சதவீதத்துடன் இந்தியாவிலேயே புதுச்சேரி முதலிடத்தில் திகழ்கிறது. மாணவர்களுக்கு உயர்திறன் மடிக்கணினிகள் வழங்குவதுடன், ஐடி நிறுவனங்களில் டிஜிட்டல் தொழிற்பயிற்சி மற்றும் அடல் இன்குபேஷன் மையம் மூலம் 60-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டி வருகிறோம். திருத்தப்பட்ட பாரத்நெட் மற்றும் சுவான் திட்டங்கள் மூலம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள் டிஜிட்டல் முறையில் தடையின்றி இணைக்கப்பட்டுள்ளன” என்றார்.

மேலும் தொழில்துறை வளர்ச்சி குறித்து அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் ஒரு நகராட்சியால் உருவாக்கப்படும் முதலாவது ஐடி/ஐடிஇஎஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் காரசூரில் அமைக்கப்படும் பல்துறை பொருளாதார மண்டலம் என இரண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சுமார் ₹2,000 கோடி தொழில் முதலீடுகளும், உள்ளூர் இளைஞர்களுக்கு 8,500 நேரடி வேலைவாய்ப்புகளும் உருவாக வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையம் (AI Centre of Excellence) மற்றும் இணையப் பாதுகாப்பு கட்டமைப்புகளும் தீவிரமாக வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

செமிகண்டக்டர், மின்னணு உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேவைகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். உள்கட்டமைப்பு, அமைதியான சூழல் மற்றும் திறமையான மனிதவளத்தைக் கொண்டுள்ள புதுச்சேரியை ‘மேக் இன் புதுச்சேரி’ தொலைநோக்குப் பார்வையின் கீழ் புதிய முதலீட்டு இலக்காக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன