முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை: அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் முப்படை நலத்துறை சார்பில், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையரின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கியமைக்கான ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முப்படை நலத்துறை அமைச்சர் திரு. ஜி.என்.எஸ். ராஜசேகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தகுதிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
புதுச்சேரி அரசு முப்படை நலத்துறையின் மூலமாக முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2025-26-ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு (SSLC/CBSE) மற்றும் 12-ஆம் வகுப்பு (State/CBSE) பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளும் இந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய 11 தகுதியான மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
நாட்டின் பாதுகாப்பிற்காகப் பங்காற்றிய முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வியிலும் விளையாட்டிலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் முப்படை நலத்துறை அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

