தமிழ்நாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா: நினைவிடத்தில் அமைச்சர் வி.கே.ராஜீவ் நேரில் ஆய்வு!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவினை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முனைவர் வி.கே.ராஜீவ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்த அமைச்சர், நினைவிட வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விழாவுக்காக செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிவகுரு பிரபாகரன், IAS., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G.சந்தீஷ், IPS., ஆகியோர் உடனிருந்து விழா முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், விழாவின் போது பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பது, தற்காலிக கழிப்பறை வசதிகள், தடையில்லா மின்சாரம், சுகாதாரப் பணிகள் மற்றும் தூய்மை நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் துரிதமாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வருகை தரவுள்ளதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு, அவசர மருத்துவ வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையிலான சிறப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்தும் காவல் துறையினருடன் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எவ்வித குறைபாடுகளும் இன்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவினை மிகச் சிறப்பான முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன