புதுச்சேரி வருகை தந்த தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜாதோத்து ஹுசைனுக்கு உற்சாக வரவேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு ஜாதோத்து ஹுசைன் மற்றும் அவருடன் வந்த குழுவினருக்குப் புதுச்சேரி அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு வருகை தந்த தேசிய ஆணைய குழுவினரை, புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு ராஜவேல் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் அரசு செயலர் முனைவர் அ. முத்தம்மா, இ.ஆ.ப., புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு அ. குலத்துங்கன், இ.ஆ.ப., மற்றும் திரு கலைவாணன், இ.கா.ப. ஆகியோர் உடனிருந்து பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினர்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு அர்ஜுன் ராமகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் முனைவர் குலசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி திரு வசந்தன் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு குழுவினரை முறைப்படி வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு ஜாதோத்து ஹுசைன் பல்வேறு பழங்குடியின நல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் மக்களின் தேவைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.
இப்பயணத்தின் மூலமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் முறையாகச் சென்றடைகிறதா என்பது குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

