புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி: உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறைக்கு நாட்டின் உயரிய பெருமையான குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி (President’s Colour) வழங்கப்பட்டதை முன்னிட்டு, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களைக் காவல்துறை உயரதிகாரிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினர்.
காவல்துறையினரின் தன்னலமற்ற சேவை, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில் இந்த உயரிய குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவத்தைப் புதுச்சேரி காவல்துறை பெற்றுள்ளதைத் தொடர்ந்து இச்சந்திப்பு நிகழ்ந்தது.
இச்சந்திப்பின்போது, புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திருமதி. ஷாலினி சிங் அவர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் அமைச்சரைச் சந்தித்தனர். அப்போது துணை காவல்துறை தலைமை இயக்குநர் (DIGP) திரு. சத்தியசுந்தரம், சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP) திரு. கலைவாணன் IPS மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. குப்தா ஆகியோர் உடனிருந்தனர்.
காவல்துறை உயரதிகாரிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடியை மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களிடம் காண்பித்து வழங்கி, தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். இச்சாதனை புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
