புதுச்சேரி

நாவற்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.33.38 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்: செல்வகணபதி எம்பி திறந்து வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட நாவற்குளம் அரசு ஆரம்பப் பள்ளிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி இன்று முறைப்படி திறந்து வைத்தார்.

காலாப்பட்டு நாவற்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருவதாகவும், கூடுதல் வகுப்பறைகள் அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையினை ஏற்று, புதுச்சேரி மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் எஸ்.செல்வகணபதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS) ரூ.33 லட்சத்து 38 ஆயிரம் நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் இரு புதிய கூடுதல் வகுப்பறைகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரமான முறையில் துரிதமாகக் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட இந்த வகுப்பறைக் கட்டடங்களின் திறப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எஸ்.செல்வகணபதி எம்பி, புதிய வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய செல்வகணபதி எம்பி, அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் முதன்மைக் கடமையாகும் என்றும், தொகுதி மக்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தேவையான அடிப்படைத் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில், லாஸ்பேட்டை தொகுதி பாஜக தலைவர் பன்னீர்செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புதிய வகுப்பறைகள் திறக்கப்பட்டதால் பள்ளி நிர்வாகமும் மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன