ரூ.450 கோடி மேம்பாலத்திற்கு பதில் சாலை விரிவாக்கம் செய்யலாம்: பேரவையில் எம்.எல்.ஏ ஜான்குமார் யோசனை!
புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான பகுதியில் ரூ.450 கோடி செலவில் மேம்பாலம் அமைப்பதற்கு பதிலாக, மக்களுக்கு இழப்பீடு வழங்கி சாலையை விரிவுபடுத்தலாம் என சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ ஜான்குமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், நகரின் முக்கிய வழித்தடமான இந்திராகாந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு சுமார் ரூ.450 கோடி வரை பெருமளவு நிதி தேவைப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இவ்வளவு பெரிய தொகையை மேம்பாலம் கட்டுவதற்காக மட்டுமே செலவழிப்பதை விட, அப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி சாலையை அகலப்படுத்தினால் அரசின் நிதிச் சுமை பெருமளவு குறையும் என சுட்டிக்காட்டினார். இதன் மூலம் குறைந்த செலவில் விரைவாக போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.