மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு & திறன் மேம்பாட்டு பயிற்சி: முதல்வர் ரங்கசாமியிடம் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு!

புதுச்சேரி: மேகேதாட்டு விவகாரத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியும், மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தியும் புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதை தீவிரமாக எதிர்த்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் இது தொடர்பாக தனி நபர் தீர்மானம் கொண்டு வருவதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
மேலும், காமராஜ் நகர் தொகுதி மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில், காமராஜர் மணிமண்டபத்தில் இலவச திறன் வளர்ச்சிப் பயிற்சிகளை (Skill Development Training) நடத்துவதற்கும் உரிய அனுமதி வழங்குமாறு அவர் முதலமைச்சரிடம் மனு அளித்து விரிவாகக் கேட்டுக் கொண்டார். இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.