புதுச்சேரி

லாஸ்பேட்டையில் அங்கன்வாடி திருவிழா: நலத்திட்ட உதவிகளை வழங்கி செல்வகணபதி எம்பி புகழாரம்!

புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி முன்னெடுக்கப்பட்டு வரும் சேவை மாத இயக்கத்தின் ஒரு பகுதியாக, அங்கன்வாடி திருவிழா மற்றும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வகணபதி எம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைத் தொடங்கி வைத்தார்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா சகோதரிகளின் அர்ப்பணிப்புமிக்க மக்கள் சேவையைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவில், அங்கன்வாடி மையங்கள் மூலம் பயன்பெற்று வரும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு செல்வகணபதி எம்பி சிறப்புப் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எம்பி செல்வகணபதி, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சேவை உறுதிமொழி மாதமாகக் கொண்டாடி வருகிறது. மற்ற கட்சிகளைப் போல் விழாக் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கன்வாடிகள் மூலமாக மத்திய அரசு ரூ.5,000 நிதியுதவியை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தி உறுதுணையாக நிற்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாள்தோறும் மூன்று மணி நேரம் மட்டுமே உறங்கி, தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பாரதத்தை உலக வல்லரசாக்கவும் அயராது உழைத்து வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் வீடுதோறும் சென்றடைவதை உறுதி செய்ய தொண்டர்கள் களப்பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன