மக்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: சுற்றுச்சூழல் பாதுகாப்போடு கொண்டாட அழைப்பு!

புதுச்சேரி, செப். 14:
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில உள்துறை, கல்வி மற்றும் மின்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பொதுமக்களுக்கு தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தடைகளைத் தகர்த்து, வெற்றிக்கு வழிகாட்டும் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை போற்றி வழிபடும் உன்னதத் திருநாளே விநாயகர் சதுர்த்தி ஆகும். விநாயகர் பெருமானின் அருளால், புதுச்சேரி மக்கள் அனைவரது வாழ்விலும் அனைத்துத் தடைகளும் நீங்கி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, வளம் மற்றும் வெற்றி நிறைந்திட உளமார வேண்டுகிறேன்.
மேலும், குடும்பங்களில் அன்பும் ஒற்றுமையும் மேலோங்கி, ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையும், முன்னேற்றமும் ஏற்பட முழுமுதற் கடவுள் அருள்புரிய வேண்டும். இத்திருநாளில் மக்கள் அனைவரும் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் விநாயகர் பெருமானை வழிபட்டு, சமூக நல்லிணக்கத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பேணி விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
விநாயகர் பெருமானின் திருவருள் அனைவருக்கும் என்றும் கிடைக்கப் பெற்று, நமது புதுச்சேரி மாநிலம் மேலும் பன்மடங்கு வளர்ச்சி அடையவும் மக்கள் வளமுடன் வாழவும் பிரார்த்திக்கிறேன்” என்று தனது வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் நமச்சிவாயம் குறிப்பிட்டுள்ளார்.


