ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்!

புதுச்சேரி: பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் நடைபெறும் அதிகப்படியான கட்டணக் கொள்ளையைத் தடுக்க, அனைத்து தனியார் பேருந்துகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு 630 பேருந்துகளுக்கு ரூ.30.25 லட்சம் அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டண பாக்கியான ரூ.27,58,243-ஐ கழித்துவிட்டால், வசூலிக்கப்பட்ட உண்மையான அபராதம் வெறும் ரூ.3,19,000 மட்டுமே ஆகும். இதன்மூலம் ஒரு பேருந்துக்கு சராசரியாக வெறும் ரூ.506 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 கட்டணத்தை ரூ.1500 ஆகவும், ரூ.1000 கட்டணத்தை ரூ.3000 ஆகவும் உயர்த்தி பயணிகளைச் சுரண்டும் ஆம்னி பேருந்துகளுக்கு, ரூ.506 அபராதம் விதிப்பது எந்த வகையிலும் தீர்வாகாது. எனவே, டாஸ்மாக் கடைகளை அரசே ஏற்று நடத்துவது போல, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள தனியார் பேருந்துகளையும் அரசே ஏற்று குறைந்த கட்டணத்தில் இயக்குவதே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


