புதுச்சேரி

மக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்து: மாநில வளர்ச்சி, ஒற்றுமை ஓங்க அழைப்பு!

புதுச்சேரி, செப். 13: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந. ரங்கசாமி பொதுமக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ந. ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தி திருநாளானது, புதிய தொடக்கங்களின் சிறப்பை உணர்த்தும் திருநாளாகும். பெருமைமிக்க மணக்குள விநாயகர் அருள்பாலிக்கும் புண்ணிய பூமியான புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ஆன்மீக உணர்வோடும், பெருமகிழ்ச்சியோடும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்டவராகப் போற்றப்படும் விநாயகப் பெருமானைத் தொழுது, புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றி கிட்டும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதன்படி நாம் மேற்கொள்ளும் அனைத்து நற்காரியங்களும் தடைகளின்றி விரைந்து வெற்றி பெற விநாயகப் பெருமானின் பரிபூரண அருள் எப்போதும் துணை நிற்க வேண்டும்.

புதிய தொடக்கங்களை உணர்த்தும் இத்திருநாள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொண்டுவரட்டும். சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கவும், மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்தி மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கவும் இத்திருநாள் புதிய நம்பிக்கையை அளிக்க வேண்டும். ஒவ்வொருவரது வாழ்விலும் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைய இறைவனைப் பிரார்த்தித்து அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன