ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் ஆசிரியர் தின வாழ்த்து

புதுச்சேரி, செப். 4: புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான மாறுதல் கொள்கையை அரசு வகுத்துள்ளதாகவும் கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் உன்னதப் பணியில் தங்களை அர்ப்பணித்து, மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கம், நற்பண்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வையும் கற்றுத்தரும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி என்பது மனிதனை அறிவிலும் பண்பிலும் உயர்த்தும் அழியாத செல்வம் ஆகும். அத்தகைய அழியா செல்வத்தை தலைமுறைகளுக்கு வழங்கும் உன்னதமான பணியை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றி வருகின்றனர். மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் கனவுகளுக்கு வழிகாட்டியாகவும், வாழ்க்கைப் பயணத்தில் துணைநிற்கும் நல்லாசிரியர்களாகவும் திகழும் ஒவ்வொரு ஆசிரியரின் பங்களிப்பும் போற்றுதலுக்குரியதாகும்.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், புதுச்சேரியில் ஆட்சி செய்யும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஒருபோதும் தயங்கியதில்லை. ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான வெளிப்படையான இடமாறுதல் கொள்கை (Transfer Policy) அரசால் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
கல்வியின் முதுகெலும்பாக விளங்கி, அறிவால் இளைய தலைமுறையைச் செதுக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

