அரசியல்

டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: நாராயணசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கைது!

புதுச்சேரி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் நடத்திய அத்துமீறலைக் கண்டித்து, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா சாலை காமராஜர் சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் ஜனநாயக முறைப்படி அமைதியாக ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் சென்ற காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியிலும் இந்த கண்டனக் குரல் வலுவாக ஒலித்துள்ளது.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி முன்னிலை வகித்தார். மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தின் அனைத்து வரம்புகளையும் மீறிச் செயல்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் எனவும் தலைவர்கள் ஆவேசமாக உரையாற்றினர். மேலும், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து வானதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். தொடர்ந்து அண்ணா சாலையில் அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தைக் காக்கும் வரை காங்கிரஸ் பேரியக்கம் தனது ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஓயாது முன்னெடுக்கும் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் இப்போராட்டத்தின் போது திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன