புதுச்சேரி

பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவை: புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் பங்கேற்புடன் ‘சேவா ஜோதி யாத்திரை’ பேரணி!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால இணையற்ற மக்கள் சேவையையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், புதுச்சேரியில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ இயக்கத்தின் கீழ் ‘சேவா ஜோதி யாத்திரை’ மாபெரும் மக்கள் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற காந்தி சிலையிலிருந்து இப்பேரணி தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட சேவா ஜோதி யாத்திரை, நகரின் முக்கிய சாலைகள் வழியாக அணிவகுத்துச் சென்று எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள அருள்மிகு பாளையத்தம்மன் கோவில் வளாகத்தை அடைந்து நிறைவு பெற்றது. வழிநெடுகிலும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த விமரிசையான பேரணியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர் ந. ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், புதுச்சேரி பாஜக மாநிலப் பொறுப்பாளர் கே. சுரேந்திரன், பாஜக மாநில தலைவர் வி.பி. இராமலிங்கம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். இவர்களுடன் பாஜக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பிரதமரின் மக்கள் நலத் திட்டங்களை நினைவுகூர்ந்தனர்.

பிரதமர் மோடியின் ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் நலப் பணிகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்தோடு இந்த யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கூட்டணி தலைவர்கள் மற்றும் ஆளுநர் ஒரே மேடையில் இணைந்து மக்கள் இயக்கங்களில் பங்கேற்பது புதுச்சேரி அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே ஆரோவில்லில் நடைபெற்ற மத்திய அரசின் ‘மை பாரத்’ மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த ‘வந்தே மாதரம் முகாம்’ போன்ற முக்கியத் தேசிய நிகழ்வுகளில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் இணைந்து பங்கேற்று இளைஞர்களை ஊக்கப்படுத்தியிருந்த நிலையில், தற்போது தேசத் தலைவரின் மக்கள் சேவையைப் போற்றும் இந்த ‘சேவா ஜோதி யாத்திரை’யிலும் தலைவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன