புதுச்சேரி

மனநலப் பிரச்னைகளைக் கண்டறிய 3 புதிய செயலிகள்: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை; முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, அக். 08:

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் (PTU), தேசிய மனநலத் திட்டத்துடன் (NMHM) இணைந்து மனநலப் பாதிப்புகள் மற்றும் கற்றல் குறைபாடுகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் வகையில் மூன்று பிரத்யேக மென்பொருள் செயலிகளை உருவாக்கியுள்ளனர். இப்புதிய தொழில்நுட்பச் செயலிகளைப் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் என். ரங்கசாமி முறைப்படி அறிமுகப்படுத்தி பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டப்படிப்பைச் சேர்ந்த 14 மாணவ, மாணவிகள் தங்களது பேராசிரியர்கள் மற்றும் மனநலத்துறை மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த நவீன செயலிகளை வடிவமைத்துள்ளனர். மனநலன் சார்ந்த சவால்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக எதிர்கொள்ளும் நோக்கில் ‘மைண்டோரா-பை’ (Mindora-Py), ‘பீஸ்’ (Peace) மற்றும் ‘அல்ஸ்பிரடிக்ட்’ (AlzPredict) ஆகிய 3 செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான கற்றல் குறைபாடுகளைக் கண்டறிய ‘மைண்டோரா-பை’ என்ற மொபைல் மற்றும் இணைய செயலி வழிவகுக்கிறது. 5 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்களிடையே காணப்படும் டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராஃபியா மற்றும் டிஸ்கால்குலியா போன்ற நரம்பியல் சார்ந்த கற்றல் குறைபாடுகளை மிகத் துல்லியமாக அடையாளம் காண இந்தச் செயலி பெரிதும் உதவுகிறது. இதன்மூலம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு ஆரம்பத்திலேயே தகுந்த சிறப்புப் பயிற்சிகளை வழங்க முடியும்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களின் மன அழுத்தத்தைக் கண்காணிக்கும் வகையில் ‘பீஸ்’ (Peace) என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு வாரியாக மாணவர்களின் மனநிலையை மதிப்பீடு செய்வதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் தீவிர மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறிகளை இச்செயலி கண்டறிந்து எச்சரிக்கும். இதனால் மாணவர்கள் தற்கொலை எண்ணங்கள் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதைத் தடுத்து உரிய ஆலோசனைகளைப் பெற இயலும்.

முதியவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் மறதி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ‘அல்ஸ்பிரடிக்ட்’ (AlzPredict) என்ற இணையதளம் சார்ந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவிற்கு (OPD) வரும் முதியவர்களைப் பரிசோதித்து, அல்சைமர் பாதிப்பு உள்ளதா என்பதை எளிதாகக் கண்டறியும் டிஜிட்டல் கருவியாக இது செயல்படுகிறது.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை (ECE) பேராசிரியர் கே. ஜெயந்தி, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மனநலத்துறைத் தலைவரும் தேசிய மனநலத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பாலன் ஸ்டீபன் பொன்னுமணி மற்றும் பிம்ஸ் (PIMS) மருத்துவமனை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் பிரதீப் திலகன் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் மாணவர்கள் இச்சாதனையைப் படைத்துள்ளனர். நிகழ்ச்சியில், செயலிகளை உருவாக்கிய 14 மாணவர்களுக்கும் அவர்களுக்குத் துணைநின்ற வழிகாட்டிகளுக்கும் முதல்வர் ரங்கசாமி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன