காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் பிஎச்.டி. சேர்க்கை கடிதங்களை வழங்கினார் அமைச்சர் நமச்சிவாயம்!

புதுச்சேரி: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான முனைவர் பட்டப் (Ph.D.) படிப்பு சேர்க்கை அனுமதி கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் நேரில் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, காஞ்சி மாமுனிவர் கல்வி நிறுவன வளாகத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO) வசதியினை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். மேலும், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் பணியாளர்களின் சுகாதார வசதிக்காக முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட மகளிர் கழிப்பறை வளாகத்தையும் அவர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பசுமையான மற்றும் தூய்மையான கல்விச் சூழலை உருவாக்குவதற்கான உறுதிமொழியையும் அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவன பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


