காரைக்கால் புதுச்சேரி பல்கலைக்கழக வளாக மாணவர் தேர்தல்: 6 இடங்களையும் முழுமையாகக் கைப்பற்றி ABVP அபார வெற்றி! எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் வாழ்த்து

காரைக்கால்:
காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள ஆறு பொறுப்புகளையும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழுமையாகக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளனர்.
மத்தியப் பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகத்தில் மாணவர் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் விதிகளுக்கு உட்பட்டு சுமுகமாக நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, அமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினர்.
இத்தேர்தலில் தலைவராக (Chairman) எம்பிஏ பயிலும் கே.ஜே. விஜய்சிம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், முனைவர் பட்டப் பிரிவு (Ph.D.) மாணவர்களான வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரியங்கா, எம்பிஏ பிரிவு மாணவி வினோதினி, பிபிஏ பட்டப்பிரிவு மாணவர்களான ஆயுஷ் தாஸ் மற்றும் கிரிஜா ஆகிய 6 பேர் அனைத்துப் பொறுப்புகளிலும் முழு வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
மாணவர் தேர்தலில் முழுமையான வெற்றியைப் பதிவு செய்த மாணவர் பிரதிநிதிகளுக்கு, நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் வி. விக்னேஸ்வரன் (MBBS) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி முன்னேற்றம், வளாக நலன் மற்றும் தலைமைத்துவப் பண்புகளின் வளர்ச்சிக்காகப் புதிய பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட்டு மாணவர் சமூகத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாழ்த்தியுள்ளார்.



