மொரப்பூர் – ராணி மூக்கனூர் ரயில் பாதை திட்ட டெண்டர் வரவேற்பு: அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
தருமபுரி, மே 10: தருமபுரி – மொரப்பூர் இடையிலான 38 கி.மீ புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, மொரப்பூரிலிருந்து ராணி மூக்கனூர் வரை 10.221 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் டெண்டர் கோரியிருப்பது தருமபுரி மாவட்ட மக்களின் 85 ஆண்டு கால கனவு நனவாவதற்கான தொடக்கம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி – மொரப்பூர் ரயில் பாதை திட்டம் தமது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். 2014-ஆம் ஆண்டில் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்திலும் தொடர்ச்சியாக ரயில்வே அமைச்சர்களிடமும் தீவிரமாக வலியுறுத்தியதன் விளைவாக, இத்திட்டம் 2016-17 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கடந்த 06.02.2019 அன்று ரூ.358.95 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து 04.03.2019 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது முதற்கட்ட பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் முக்கிய முன்னேற்றமாகும் என அவர் தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.
மீதமுள்ள 28 கி.மீ பாதையில், 8 கி.மீ தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இத்திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலமான 93.11 ஹெக்டேரில், 46.79 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் 26.19 ஹெக்டேர் தனியார் பட்டா நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் தாமதமாவதே அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்குவதில் தடையாக உள்ளது.
ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மாவட்டத் தலைநகரை மாநிலத் தலைநகருடன் இணைப்பது அவசியமாகும். எனவே, தருமபுரியை சென்னையுடன் இணைக்க இன்றியமையாத இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்தி வழங்கிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

