தமிழ்நாடு

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பொதுப் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீவிர ஆய்வு!

திருப்பூர்: தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பொதுப் பார்வையாளர் சின்மய் புண்ட்லிக்ராவ் கோட்மரோ (இ.ஆ.ப.) அவர்கள், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் மனிஷ் நாரணவரே (இ.ஆ.ப.) முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் பாதுகாப்பு அறை (Strong Room), வாக்கு எண்ணும் மேசைகள் அமைவிடம், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமரும் பகுதிகள், மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பிரத்யேக வசதிகள் குறித்து அதிகாரிகள் விரிவாகக் கேட்டறிந்தனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தடையில்லா மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசரகால பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி, வாக்கு எண்ணும் மைய பணிகளை முழுப் பாதுகாப்புடன் துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன