தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று எதிர்க்கட்சி வலுப்பெறுவது ஜனநாயகத்துக்கு நல்லது: நாஜிம் பேட்டி
காரைக்கால்: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வலுப்பெறுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிகவும் நல்லது என்று புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் யாருக்குச் சொந்தமானவை என்பதை தேர்தல் ஆணையம் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். அந்த தங்க நாணயங்கள் நகை வியாபாரிகளுடையதா அல்லது அரசியல் வியாபாரிகளுடையதா என்பதை தேர்தல் அதிகாரிகள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், மக்கள் இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்கி திமுகவை வெற்றி பெறச் செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே உண்மையான கூட்டணி நிலவுவதாகத் தெரியவில்லை எனவும், பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடாததால் அவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் என்று அழைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இடையேயான மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
