புதுச்சேரியில் பாஜக சார்பில் பிரம்மாண்ட ‘சேவா ஜோதி யாத்திரை’: ஆளுநர், முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்வு மற்றும் மக்கள் சேவையை போற்றும் வகையில், ‘சேவா சங்கல்ப அபியான்’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘சேவா ஜோதி யாத்திரை’ வெகு விமரிசையாக நடைபெற்றது. கடற்கரை சாலையில் தொடங்கிய இந்த யாத்திரையில் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை திடலில் நடைபெற்ற தொடக்க விழாவில், மாண்புமிகு துணைநிலை ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பாஜக மாநில பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான கே.சுரேந்திரன் ஆகியோர் இணைந்து சேவா ஜோதியை ஏற்றி யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர். இந்த யாத்திரையானது நகரின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள பாளையத்தம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது.
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் வி.பி. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர். பொதுவாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமரின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் போற்றும் வகையில் புதுச்சேரி முழுவதும் பல்வேறு சேவைப் பணிகளும், சிறப்பு ரத்ததான முகாம்களும் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்ற இந்த சேவா ஜோதி யாத்திரை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
