புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 31 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுச்சேரி, அக். 06:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வேட்பாளர் அசோக் ஆனந்த், திமுக வேட்பாளர் சேதுசெல்வம் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தொகுதியில் 12,575 ஆண்கள், 14,341 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். பொதுமக்கள் வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வாக்களிக்க காலை 6.30 மணி முதலே நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் லாஸ்பேட்டை குளுனி பள்ளியிலும், திமுக வேட்பாளர் சேதுசெல்வம் பாக்குமுடையான்பட்டு நூலக வாக்குச்சாவடியிலும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தொகுதியில் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 46 கண்ட்ரோல் யூனிட்கள், 46 பேலட் யூனிட்கள் மற்றும் 48 விவிபாட் இயந்திரங்கள் என மொத்தம் 140 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 500 போலீசார் மற்றும் 5 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உதவ மாணவத் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். வரும் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன