புதுச்சேரி

காரைக்கால் கிராமப்புற வழித்தடங்களில் மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும்: முதலமைச்சரிடம் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் மனு!

நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமியிடம் நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களின் தடையற்ற போக்குவரத்து வசதிக்காக புதிதாக மின்சார பேருந்துகள் (Electric Bus) அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட நல்லாத்தூரில் இருந்து பல்வேறு கிராமப்புற வழித்தடங்களில் இந்த மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் என். ரங்கசாமியிடம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் அளித்த மனுவில், “நல்லாத்தூரில் இருந்து வடமட்டம், கோட்டுச்சேரி வழியாக காரைக்காலுக்கும்; மேலகாசாக்குடி வழியாக காரைக்காலுக்கும்; அதேபோல் திருவட்டக்குடி, மண்டபத்தூர், கோட்டுச்சேரி வழியாக காரைக்காலுக்கும் புதிதாக மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த கிராமப்புற வழித்தடங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும், சுற்றுச்சூழல் மாசு குறைந்து பசுமைப் பயணம் மேம்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மனுவினைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், இக்கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன