புதுச்சேரி

புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் குற்றவியல் நீதிமுறை ஒருங்கிணைப்புக் கூட்டம்: முக்கிய முடிவுகள்!

புதுச்சேரி, செப். 18:
புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் குற்றவியல் நீதிமுறை ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. புதுவை அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் (DGP) ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முக்கிய கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவது, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வழக்குகள் தொடர்பான சட்ட ரீதியான கலந்துரையாடல்கள், தடய அறிவியல் விசாரணை உத்திகள், நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் அறிவியல் பூர்வ டிஜிட்டல் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறை, நீதித்துறை, புலனாய்வு அமைப்புகள், தடய அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் சிறைத்துறை ஆகியவை ஒன்றிணைந்து குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை வடிவமைக்க இக்கூட்டம் வழிவகுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த வாராந்திர ஆலோசனைக் கூட்டம் மற்றும் சிறப்புப் பயிற்சியை சிறைத்துறை சார்பில் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் அவர்களின் வழிகாட்டுதலுடன், பயிற்சி மற்றும் காவல் நலத்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்தர் குமார் குப்தா இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் விசாரணைத்துறை உதவி இயக்குநர் அருண், சிறப்புப் பணி அலுவலர் மற்றும் கூடுதல் உதவி நீதிபதி சௌந்தர்யா, சிராஸ்தார் தலைவர் மனோன்மணி, மாவட்ட நீதிமன்ற சிஸ்டம் அனலிஸ்ட் ஹியதுல்லா, சிறை உதவி கண்காணிப்பாளர் கபிலன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன