கஞ்சா கலாச்சாரத்தை ஒடுக்க எஸ்.எஸ்.பி தலைமையில் தனிப்படை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்குவதற்கு, எஸ்.எஸ்.பி. (முதுநிலை காவல் கண்காணிப்பாளர்) தலைமையில் தனி சிறப்பு பிரிவு அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசிய அவர், மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு வேகமாகப் பரவி வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நெட்வொர்க்கை வேரோடு தகர்க்க கடுமையான நடவடிக்கைகள் அவசியமாகும் என்றும், காவல்துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வழக்கமான காவல் கண்காணிப்பு முறைகளைத் தாண்டி, எஸ்.எஸ்.பி தலைமையில் பிரத்யேகமாக இயங்கும் தனிப்பிரிவு (Special Wing) உருவாக்கப்பட்டு, இரவு பகலாக தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். இத்தகைய உறுதியான நடவடிக்கையின் மூலமே புதுச்சேரியை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மீட்டெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.


