புதுச்சேரியில் என்சிசி மாணவிகள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: உறுதிமொழி ஏற்பு!

புதுச்சேரி: மத்திய அரசின் ‘போதை இல்லா பாரதம்’ (Nasha Mukt Bharat Abhiyaan) இயக்கத்தின் 6-ம் ஆண்டு நிறைவையொட்டி, புதுச்சேரி என்சிசி குழு தலைமையகத்தின் 1-வது மகளிர் சுதந்திரப் பிரிவு என்சிசி (1 P Girls Inde Coy) மாணவிகள் சார்பில் நகரின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, போதைப் பழக்கத்தின் தீமைகளை விளக்கும் வகையிலும், ஆரோக்கியமான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்கும் நோக்கிலும் என்சிசி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, என்சிசி மாணவிகள் மற்றும் இணை என்சிசி அதிகாரிகள் (ANO) அனைவரும் போதைப்பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும், சமுதாயத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க பாடுபடுவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், மத்திய அரசின் இணையதளம் வாயிலாக மின்னணு உறுதிமொழியும் (E-Pledge) எடுத்துக்கொண்டனர்.

