தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி இந்தியா கூட்டணி & தவெக கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன், மாணிக்கம் தாகூர் பங்கேற்பு!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பாக ராஜ்மோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் கலந்துகொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தங்களது தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
போராட்டக் களத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளும் பெருமளவில் பறக்கவிடப்பட்டிருந்தன. ஜனநாயக விழுமியங்களுக்கு விரோதமாகச் செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். தவெகவின் கொடிகளுடன் திரண்டிருந்த தொண்டர்களின் ஆவேசமான பங்கேற்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் தவெகவும் கைகோர்த்து களமிறங்கியுள்ள இந்த ஆர்ப்பாட்டம் தேசிய மற்றும் மாநில அரசியல் அரங்கில் புதிய அரசியல் திருப்பமாகவும் நேரடி சவாலாகவும் பார்க்கப்படுகிறது.



