விநாயகர் சதுர்த்தி விழா: விழுப்புரம் அய்யன்கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் தீவிர விற்பனை!

விழுப்புரம்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விரைவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் அய்யன்கோவில்பட்டு பகுதியில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிறிய அளவிலான களிமண் சிலைகள் முதல் பிரம்மாண்ட பொது வழிபாட்டு சிலைகள் வரை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு சதுர்த்தி விழாவையொட்டி அய்யன்கோவில்பட்டு பகுதியில் கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பல வண்ணங்கள் மற்றும் விதவிதமான வடிவங்களிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்குத் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்காகப் பல்வேறு விழா அமைப்பாளர்களும், வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக பொதுமக்களும் அய்யன்கோவில்பட்டு பகுதிக்கு நேரில் வந்து சிலைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். விழா நெருங்கி வரும் வேளையில் சிலைகள் விற்பனை விறுவிறுப்படைந்து அப்பகுதியில் பண்டிகை உற்சாகம் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.

