ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மரியாதை

ஸ்ரீபெரும்புதூர், ஆக. 20: சத்்பாவனா திவாஸ் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
நினைவிடத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான கருங்கல் தூண், கர்நாடக மாநிலம் கனகபுராவில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை டி.கே.சிவகுமார் நினைவு கூர்ந்தார். தனது அரசியல் பயணத்தின் தொடக்க காலத்தில் ராஜீவ் காந்தி காட்டிய நம்பிக்கை மற்றும் அன்பை அவர் உணர்ச்சிகரமாக நினைவுபடுத்தினார்.
இளம் தலைவர்களை ஊக்குவித்து, மக்கள் சேவையில் ஈடுபடுவதற்கு ராஜீவ் காந்தியின் கொள்கைகளும் தொலைநோக்குப் பார்வையும் இன்றும் வழிகாட்டியாக உள்ளன என்று டி.கே.சிவகுமார் குறிப்பிட்டார். மேலும், அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் சத்்பாவனா திவாஸ் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





