தேசியம்

“ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்”: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட முயன்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் – டெல்லியில் பரபரப்பு பேரணி!

புதுடெல்லி:

மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் மற்றும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் ‘மகர் த்வார்’ பகுதியிலிருந்து இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி ‘இந்தியா’ (I.N.D.I.A.) கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர்.

இந்தக் கண்டனப் பேரணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.

நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஞானேஷ் குமார், தனது பதவியில் நீடிக்க எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான மத்திய அரசு ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தலைவர்கள் வலியுறுத்தினர்.

நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்தக் கோரி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய இந்த அதிரடி கண்டனப் பேரணி, தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன