தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே நேரில் ஆய்வு!

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தாராபுரம் கொளிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர். மனிஷ் நாரணவரே, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொளிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர், அங்கு வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கும் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதள வசதிகள், சக்கர நாற்காலி ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடி, வாக்குப்பதிவு எந்தவித தடையுமின்றி சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிடும் வகையில் தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப்காஸ்டிங் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


