தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தீவிர பிரச்சாரம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராகப் போட்டியிடும் திரு. E. விநாயகம் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும் புதுச்சேரி மாநில மேலிடப் பொறுப்பாளருமான திரு. குலாம் அகமது மிர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் இந்த எழுச்சிமிகு பிரச்சாரப் பயணம், கவுண்டம்பாளையம் – வழுதாவூர் ரோடு சந்திப்பிலிருந்து தொடங்கியது. அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற அவர், பொதுமக்கள் மற்றும் வணிகர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரினார்.
தொடர்ந்து, லாஸ்பேட் ஏர்போர்ட் மெயின் ரோடு, புகழ்பெற்ற செல்வ விநாயகர் கோயில் அருகிலும் மற்றும் வினோபா நகர் உள்ளிட்ட முக்கிய குடியிருப்புப் பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய திரு. குலாம் அகமது மிர், தொகுதியின் வளர்ச்சிக்கும் மக்களின் நலன்களுக்கும் துணைநிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. E. விநாயகம் அவர்களுக்கு மக்கள் பேராதரவு தந்து ‘கை’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
