மூன்று மாநிலங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
சென்னை, ஆக. 19: ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரயில் வழித்தடத்தை அமைக்க வேண்டும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ஆந்திராவின் அமராவதி, கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டின் சென்னை ஆகிய முக்கிய நகரங்களை இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இந்த ரயில் வழித்தடத்தை குப்பம் வழியாக அமைப்பதன் மூலம் மூன்று மாநிலங்களுக்கு இடையிலான பயண நேரத்தை பெருமளவு குறைக்க முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம், தொழில் முதலீடு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தென் மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து வலையமைப்பு, உலர் துறைமுகங்கள் அமைத்தல் மற்றும் தென் மின் கட்டமைப்பை தேசிய மின் கட்டமைப்புடன் வலுவாக இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.