பொம்மையபாளையம் வீரசைவத் திருமட குடமுழுக்கு நன்னீராட்டு விழா: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சாமி தரிசனம்!

பொம்மையபாளையம்: விழுப்புரம் மாவட்டம் பொம்மையபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் வீரசைவத் திருமடத்தில் புனரமைக்கப்பட்ட சந்நிதிகளின் மகா திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இத்திருமட வளாகத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீவிநாயகர் சந்நிதி, திருநீறாக நீற்றிக் கொண்ட ஆதி சிவஞான பாலய சுவாமிகள் சிவயோக ஜீவசமாதி, ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி குருமகாசந்நிதானங்கள் சிவயோக சமாதிகள் மற்றும் ஸ்ரீ பெருமாள் சந்நிதி ஆகியவற்றுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இப்புனிதப் பெருவிழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம் அவர்கள், தனது மனைவி திருமதி. வசந்தி நமச்சிவாயம் அவர்களுடன் நேரில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். தொடர்ந்து மடத்தின் சார்பில் அவர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திரளான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



