ஆரோவில்லில் ‘ஆரோகுளோபல்’: கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வு

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில், ‘ஆரோகுளோபல்: உறவுகளை வலுப்படுத்துதல்’ (AuroGlobal: Strengthening Connections) என்ற தலைப்பிலான சிறப்பான கலந்துரையாடல் நிகழ்வு யூனிட்டி பவிலியனில் நடைபெற்றது. இந்த நிகழ்வு கல்வி, கலாச்சாரம் மற்றும் கூட்டுறவு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு, அன்னையின் இசையுடன் கூடிய இறைவணக்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘தி டிஜிட்டல் பிரிட்ஜ்’ (The Digital Bridge) என்ற தொழில்நுட்ப அமர்வு மூலம் ஆரோகுளோபல் வலையமைப்பின் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. கல்வி, தயாரிப்புகள் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் உள்ள பலம் மற்றும் வாய்ப்புகளை இணைப்பது குறித்த ஆக்கபூர்வமான கலந்துரையாடல் குழு விவாதங்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவாக ஒருங்கிணைந்த கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த சிறப்புரை வழங்கப்பட்டது. ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் தொலைநோக்கு பார்வையை மையமாகக் கொண்டு, உலகளாவிய ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. பங்கேற்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சந்திப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான புதிய பாதைகளை வகுத்துள்ளது.