புதுச்சேரி

புதுச்சேரி அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் அசத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி சாந்தி நகரில் இயங்கி வரும் அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மறைந்த விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மாணவ, மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தையும் புத்தாக்க சிந்தனையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவியல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் அன்பழகன் உடையார் அறிவியல் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்குகளைப் பார்வையிட்ட அவர், மாணவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமையான அறிவியல் படைப்புகளை நேரில் கண்டு வியந்து அவர்களின் திறமையைப் பாராட்டினார்.

இக்கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள், நவீன விண்வெளி தொழில்நுட்பம், நீர் மேலாண்மை மற்றும் அன்றாட வாழ்வில் இயற்பியல், வேதியியல் விதிகளின் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உருவாக்கிய தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மேலும் பள்ளிக்கு வருகை தந்திருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தங்களின் அறிவியல் படைப்புகளின் செயல்முறைகளை மாணவர்கள் மிகத் தெளிவாக விளக்கி கூறினர்.

இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள் வளர்மதி அன்பழகன், உமா சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை ஊக்கப்படுத்தினர். டாக்டர் கலாமின் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து நேர்த்தியாகச் செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன