புதுச்சேரி

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மாங்குரோவ் காடுகள் அழிப்பு: துணைநிலை ஆளுநரிடம் வனத்துறை அறிக்கை சமர்ப்பிப்பு – தொழிலதிபர், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மீது நடவடிக்கை பாய்கிறது!

புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆற்றுப்படுகை பகுதியில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் அலையாத்தி காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர கள விசாரணை மேற்கொண்டு, துணைநிலை ஆளுநரிடம் விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த விசாரணையில் மாங்குரோவ் மரங்கள் அழிக்கப்பட்டது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இதில் தொடர்புடைய பிரபல தொழிலதிபர் மற்றும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுனாமி, புயல், கடல்சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது கடலோரப் பகுதிகளைக் காக்கும் இயற்கை அரணாக விளங்கும் மாங்குரோவ் காடுகளைப் பாதுகாக்க அரசு கடுமையான சட்ட விதிகளையும், மரங்களை வெட்டுவதற்கு முழுத் தடையும் விதித்துள்ளது. எனினும், புதுச்சேரி மீன்பிடித் துறைமுகத்தை ஒட்டியுள்ள உப்பளம் மற்றும் தேங்காய்த்திட்டு உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பதும், சதுப்புநில மரங்களை அழிப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், வணிக ஆதாயத்திற்காக சொகுசு விடுதி அமைக்க இயற்கை வளங்களை வேரோடு சாய்த்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீராம்பட்டினத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான ரூபி கடற்கரை மற்றும் பூரணாங்குப்பத்தில் உள்ள சாண்ட்யூன்ஸ் கடற்கரையை குத்தகைக்கு எடுத்து தொழில் நடத்தி வரும் தொழிலதிபர் ஜெ.பி. மற்றும் முதலமைச்சருடன் நெருக்கமாக வலம் வரும் எல்லைப்பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஆகியோர் இணைந்து தேங்காய்த்திட்டு ஆற்றங்கரை பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை பினாமி பெயரில் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அங்கு படகு இல்லத்துடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு விடுதி (Luxury Hotel & Boathouse) கட்ட திட்டமிட்ட இவர்கள், அப்பகுதியில் இயற்கையாக வளர்ந்திருந்த அலையாத்தி காடுகளை அழிக்க முற்பட்டுள்ளனர்.

இதற்காக ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்களைப் பயன்படுத்தி ஆற்றோரத்தில் இருந்த மாங்குரோவ் காடுகளைத் தரைமட்டமாக்கி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகைக்குப் புகார்கள் சென்றதையடுத்து, உடனடியாக கள விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் வனத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தேங்காய்த்திட்டு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள், காடுகள் அழிக்கப்பட்டதை புகைப்பட மற்றும் நில அளவை ஆதாரங்களுடன் உறுதி செய்து ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது விரைவில் குற்றவியல் வழக்குப்பதிவு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன