காரைக்கால்

காரைக்காலில் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் கள ஆய்வு: மலைக்குறவன், காட்டுநாயக்கன் மக்களின் வாழ்வியல் தேவைகளை கேட்டறிந்தார்!

காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் வசிக்கும் மலைக்குறவன் மற்றும் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்க்கைச் சூழலை நேரில் ஆய்வு செய்வதற்காக, தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் (NCST) உறுப்பினர் ஜதோத்து ஹுசைன் நாயக் காரைக்கால் பகுதிக்கு வருகை தந்து விரிவான கள ஆய்வினை மேற்கொண்டார். காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரில் சென்ற தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர், அங்குள்ள குடும்பங்களின் சமூகப் பொருளாதார சூழல், வீடுகளின் நிலை, குடிநீர், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தார்.

அப்பகுதி மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடிய அவர், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் நீண்டகாலக் கோரிக்கைகளைத் தனித்தனியாகக் கேட்டறிந்து பதிவேடுகளில் பதிவு செய்தார். குறிப்பாக, இந்திய அரசின் அட்டவணைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் உரிய அங்கீகாரமும் சான்றிதழும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற இம்மக்களின் மிக முக்கியமான கோரிக்கையின் பின்னணியில் இந்த கள ஆய்வு அமைந்தது. பழங்குடியின மக்களின் உண்மையான நிலையை நேரில் கண்டறிந்து, அதன் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பரிந்துரைகள் அனுப்பும் நோக்கில் இந்த அதிகாரப்பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களின் நீண்டகால உரிமைகள் நிலைநாட்டப்படவும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்கவும் தங்களின் வாழிடங்களுக்கே நேரில் வருகை தந்து குறைகளைக் கேட்டறிந்த தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜதோத்து ஹுசைன் நாயக் அவர்களுக்கு, காரைக்கால் வாழ் மலைக்குறவன் மற்றும் காட்டுநாயக்கன் பழங்குடியின அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன