யூடியூபர் ஹரீஷ் தற்கொலை விவகாரம்: மற்றொரு பிரபல யூடியூபர் ஜேசன் சாமுவேல் அதிரடி கைது!

சென்னை, அக். 22:
சமூக வலைதளங்களில் நிதி ஆலோசகராகப் புகழ்பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த யூடியூபர் ஹரீஷ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மற்றொரு பிரபல யூடியூபரான ஜேசன் சாமுவேலைத் தாம்பரம் மாநகரக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த விநாயகத்தின் மகன் ஹரீஷ் (27), சென்னை கானத்தூர் நாகாத்தம்மன் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் “Finance with Harish” என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி, அதில் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவருக்கு சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் (Followers) இருந்தனர்.
இந்நிலையில், மற்றொரு யூடியூப் பிரமுகரான ஜேசன் சாமுவேல் விஜயகுமார் (30), ஹரீஷை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், அவரைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹரீஷின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஹரீஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கானத்தூர் காவல் துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், ஹரீஷின் தற்கொலைக்கு ஜேசன் சாமுவேல் தூண்டுதலாக இருந்தது உறுதியானது. இதையடுத்து ஜேசன் சாமுவேல் விஜயகுமாரைக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)


