காரைக்கால்

காரைக்காலில் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ், இலவச மனைப்பட்டா: தேசிய ஆணையத்திடம் விசிக மனு!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு உரிய எஸ்.டி. சாதிச் சான்றிதழ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, நிரந்தர வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் கள ஆய்வு மேற்கொண்ட தேசிய பழங்குடியினர் ஆணையத்திடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரிவான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்த தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்தித்த விசிக மாநில துணைச் செயலாளர் சு.விடுதலைகனல் இந்த மனுவை வழங்கினார். அந்த மனுவில், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இருளர், வில்லி, வேட்டைக்காரன் உள்ளிட்ட சமூகத்தினர் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும், காரைக்காலில் தகுதியுடைய குடும்பங்களுக்கு சமூகச் சான்றிதழ் வழங்குவதில் கடுமையான நிர்வாகத் தடைகளும் காலதாமதங்களும் நிலவுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் பழங்குடியின மாணவ-மாணவிகள் உயர்கல்வி சேர்க்கை, கல்வி உதவித்தொகை மற்றும் அரசுப் பணிகளில் சட்டப்படியான இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முடியாமல் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம், திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உடனடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட ஆணையம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல தலைமுறைகளாக வசித்தும் குடியிருப்பு நிலங்களுக்குப் பட்டா இல்லாததால், அரசு வழங்கும் வீட்டுவசதித் திட்டங்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, வீடற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், சுயதொழில் தொடங்க மானிய உதவி அளிக்க வேண்டும் மற்றும் சாதிய அவமதிப்பு புகார்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற 30, 60 மற்றும் 90 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்து, சிறப்பு முகாம்களை நடத்தி விரைந்து தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திற்குத் தகுந்த பரிந்துரைகளை வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல்கள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன